சீனாவில் கொரோனா பலி; பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்ட உடல்கள்: பரபரப்பு வீடியோ

பீஜிங்,

சீனாவில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்பு உடனடியாக, கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடந்த 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது.

சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்ட பின்னர், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவிய, சீனாவின் அரசு ஆவணங்கள் பற்றி கசிந்த தகவல்களை குறிப்பிட்டு ரேடியோ ப்ரீ ஆசியா தெரிவித்து இருந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவேக் போதிய நோயெதிர்ப்பாற்றல் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், முதியவர்கள் தடுப்பூசி என்றாலே வேண்டாம் என ஓடுகிறார்கள். ஊரடங்கும் வேண்டாம் என மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், ஜின்பிங் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க திணறி வருகிறது.

இந்த சூழலில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என்று அரசு அறிவித்து உள்ளது. சீனாவில், வைரசின் மரபணு தொடர் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட வெளிப்படையான தரவுகள் பற்றாக்குறையாக உள்ளன என்று அமெரிக்காவும் தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற சீனாவின் நடவடிக்கைகளால் ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. இதுபற்றி அமெரிக்காவும் பரிசீலனை செய்து வருகிறது.

சீனாவில், வெளிப்படை தன்மை குறைவாகவும், அந்நாட்டு செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும் சூழலும் காணப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் கொரோனாவுக்கு பலியான உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவித்து வைத்த வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் பத்திரிகையாளரான ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மேற்குறிப்பிட்ட அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

அதில், மருத்துவமனையின் தரையில் பெருமளவிலான உடல்கள் கிடைமட்டத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா அலையின் தீவிர பரவலை அந்நாட்டு அதிகாரிகள் வெளிப்படுத்த முன்வராமல், நிலைமை கட்டுக்குள் உள்ளது என கூறி மறைக்கும் சூழலில், சமூக ஊடகத்தில் இதுபோன்ற மிரட்டலான வீடியோ வெளிவந்து அந்நாட்டை பற்றி உலகிற்கு தெரிய செய்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.