பெங்களூரு: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 12 பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த 37 வயதான பயணி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்த போது கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ‘‘கரோனா தொற்று கண்டறியப்பட்ட 12 பேரும் நலமுடன் இருக்கின்றனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்நாடகாவில் கரோனா பரவலை தடுக்க அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை. ஒமிக்ரான் வைரஸின் புதிய வகை பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது” என்றார்.