ஜம்மு: ஜம்முவில் இன்று காலை வாகன சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து ஜம்முவின் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், “இன்று காலை வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். சுமார் 7 மணி அளவில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாகனம் வந்தது. பொதுவாக அந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக அப்படியான டிரக் ஏதும் வருவதில்லை. சரி வாகனம் அருகே வரவும் சோதனை செய்யலாம் என்றிருந்தோம். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் செல்வது போல் மறைவான பகுதிக்குச் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் திரும்பவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் நாங்கள் அந்த வாகனத்தை நெருங்கினோம். அப்போது வாகனத்திலிருந்து எங்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வந்தன. உடனே நாங்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் ட்ரக்கில் இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகிறோம். வாகனத்தில் இருந்த வெடிப் பொருட்கள் வெடித்ததால் வாகனம் தீ பிடித்தது. தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
ஜனவரி 26 குடியரசு தின விழாவை முன்னிட்டு இப்போதிருந்தே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் தான் இந்த மூன்று தீவிரவாதிகளும் சுடப்பட்டுள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இந்த தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றார்.
என்கவுன்ட்டர் முடிந்தாலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு தவிர்ப்பு: முன்னதாக நேற்று உத்தம்பூர் பகுதியில் 15 கிலோ எடை கொண்ட வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நேற்று செயலிழக்கச் செய்யப்பட்ட வெடிப் பொருள் ஆர்டிஎக்ஸ் ரகத்தைச் சேர்ந்தது. அதில் 7 கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் 5 டெட்டனேட்டர்களும் இருந்தன. அந்த வெடிப்பொருளுடன் இருந்த ஒரு குறிப்பேட்டில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பெயர் இருந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை ஜம்முவில் மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.