தமிழகத்தில் BF.7 தொற்றா? புத்தாண்டு கட்டுப்பாடுகள் அமலாகுமா? மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரை வந்துள்ளனர். அவர்களை கண்காணித்து RT-PCR பரிசோதனை செய்ததில் தாய் மற்றும் மகளுக்கு
கொரோனா வைரஸ்
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் சகோதரர் ஒருவர் காரில் விருதுநகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

விருதுநகர் திரும்ப அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவர் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெளி நடமாட்டம் இல்லாத வகையில் பார்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சகோதரர் சென்னை சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் விருதுநகர் திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டது.

எந்த வகையான தொற்று?

அதன்படி, காரில் திரும்பி கொண்டிருக்கிறார். இவர்களின் மாதிரிகள் சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அடுத்த 4 அல்லது 5 நாட்களில் முடிவுகள் கிடைக்கும். அதன்பிறகு BA.5 தொற்றா? இல்லை உள் உருமாற்றம் அடைந்திருக்கிற BF.7 தொற்றா? என்பது தெரியவரும் என்று தெரிவித்தார்.

5 நாடுகளில் மோசம்

மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவி சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென்கொரியா ஆகிய 5 நாடுகளில் இருந்து வருவோர் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எச்சரிக்கை

மற்ற நாடுகளில் இருந்து வருவோரில் ரேண்டமாக 2 சதவீதம் மட்டும் பரிசோதனை செய்யப்படும். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளதாக குறிப்பிட்டார். இதுதவிர தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நூறு சதவீதம் அமலில் இருக்கின்றன.

புத்தாண்டு கட்டுப்பாடுகள் அமலாகுமா?

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி, சானிடைஸ் செய்து கொள்வது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டியது அவசியம். கொரோனா அதிக அளவில் பரவவில்லை என்று நினைத்துக் கொண்டு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்ட வேண்டாம். ஏனெனில் BF.7 என்ற உள் உருமாற்றம் கொண்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு என்பது சுய கட்டுப்பாடு தான். கொண்டாட்டங்கள் அனைத்துமே மன மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அதேசமயம் நிலைமையை உணர்ந்து சுய கட்டுப்பாட்டுடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.