தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ திட்டம்? ஆரம்பத்திலேயே எதிர்க்கும் பாஜக!

ஆதார் அட்டை ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம். இதை போல் தமிழக அரசு ‘மக்கள் ஐடி’ என்ற திட்டத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதன் மூலம அரசின் சேவைகளை மக்கள் தடையின்றி எளிதாக பெற முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழக மின்னாளுமை முகமையால், ‘மக்கள் ஐடி’ உருவாக்கப்பட உள்ளதாகவும், இதன் வழியாக, ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான, சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள், குடிமக்கள் பெட்டகத்தில் இருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தனிநபர் தன்னுடைய மொபைல் போன் எண்ணை பயனர் குறியீடாகவும், ஒரு முறை கடவுச் சொல்லை பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆரம்பத்திலேயே பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தமிழக அரசு தேவையற்ற முயற்சியை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காக பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாக கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால், 201ஆம் ஆண்டு வரை மாநில அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே பயனாளிகளை அடையாளம்கண்டு அவர்களுக்கு சேரவேண்டிய உதவி தொகை, சம்பளம் அல்லது மானியத்தை பணமாக செலுத்தி கொண்டிருந்தன. இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் மூலம் போலி பயனாளிகளை அதிக அளவில் சேர்த்து முறைகேடுகளை செய்து, பயனாளிகளை மிரட்டி, ஏமாற்றி அவர்களுக்குரிய தொகையினை செலுத்தாமல் ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்று வந்தன.

உதாரணத்திற்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பு 150 ரூபாய் தின சம்பளத்தில், ரூபாய் ஐம்பது மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைந்தது. ஆனால், ரூபாய் 150 கொடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மீதி பணமானது இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதே நிலை தான் மற்ற அனைத்து திட்டங்களிலும் நீடித்து வந்தது.

தற்போதைய பாஜக ஆட்சியில் தான் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) இணைப்பு மூலம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய மானியம் மற்றும் உதவிகள் நேரிடையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முழுமையாக செலுத்தப்பட்டு அரசின் மானியம் மற்றும் உதவி தொகை முழுவதும் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்), முதியோர் உதவி தொகை, விவசாயிகள் கௌரவ நிதி, எரிவாயு உருளை மானியம், உர மானியம், கல்வி மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான மானியம் மற்றும் உதவி தொகை தற்போது நேரடியாக உரிய பயனாளிகளின் ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போலிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு, இடைத்தரகர்கள் அகற்றப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் மூலம் மட்டுமே இது வரை கடந்த எட்டு ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.5 லட்சம் கோடி என்பது மகத்தான சாதனை. இதன் மூலம் பரிதவித்து கொண்டிருக்கும் மக்கள் பெருமளவில் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுவதில் முறைகேடுகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேவையில்லாதவர்களுக்கு நிதியுதவி, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் போலி பயனாளிகளை சேர்த்தது, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் என பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை ஆதார் அட்டை (JAM) மூலம் கண்டுபிடித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, சில திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட தொகையும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் ஊழல், மோசடி செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ள இந்த நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை (JAM) பயனாளிகளுக்கு பேருதவி திட்டமாகவும், ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் அமைந்துள்ள நிலையில், மாநில அரசு, ஏற்கனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

ஆகவே, உண்மையை உணர்ந்து மக்கள் நலத்திட்டங்களில் ஊழலை தடுக்க வேண்டிய தமிழக அரசு, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பலவேறு சட்டரீதியான பிரச்சினைகளும் இந்த விவகாரத்தில் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளை செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச, ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.