திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது குறித்து கூறியிருந்தபடியே தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல கோடிகளை முதலீடு செய்து அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர திமுக அரசு கோடிக்கணக்கில் முதலீட்டை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலும் முதலீட்டை பெருக்கி தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சூழலை அதிகரித்திட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்தபடியே தமிழகத்தில் அதன் சிறப்பான செயல்பாட்டை படிப்படியாக செய்து வருவது, தமிழக மக்கள் மட்டுமின்றி பல நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னரிலிந்து அயராது பாடுபட்டு கிட்டதட்ட 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில், சுமார் 2 லட்சம் கோடியை முதலீடு செய்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இப்போது திமுக அரசு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பற்றி காண்போம்.
1) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி மூலம் திமுக அரசு 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில், சுமார் ரூ.17,141 கோடியை முதலீடு செய்து 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
2) சென்னையில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 22ம் தேதியன்று நடைபெற்ற “ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு” என்கிற நிகழ்ச்சியின் மூலமாக திமுக அரசு 39,150 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில், சுமார் ரூ.1880 கோடியை முதலீடு செய்து 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
3) கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதியன்று நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்கிற நிகழ்ச்சியின் மூலமாக திமுக அரசு 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில், சுமார் ரூ.35,208 கோடியை முதலீடு செய்து 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
4) நடப்பாண்டில் மார்ச் 7ம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில், தமிழக அரசு சுமார் ரூ.4,488 கோடியை முதலீடு செய்து 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
5) இந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரூ.6,100 கோடி முதலீடு செய்து, 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
6) 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தமிழக அரசு சுமார் ரூ. 3,558 கோடியை முதலீடு செய்து டிபி வேர்ல்டு மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
7) லூலூ பன்னாட்டுக் குழுமத்தின் இரு பெரும் வணிக வளாகங்கள் மற்றும் உணவு பதப்படுத்தக்கூடிய திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்து அதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் ரூ.3,500 கோடியை முதலீடு செய்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.
8) சென்னையில் கிட்டத்தட்ட 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கும் வகையிலும், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், சுமார் ரூ.500 கோடியை முதலீடு செய்து ஆஸ்டர் டிஎம் மருத்துவக் குழுமத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
9) தமிழகத்தில் சரக்குப் பூங்கா அமைத்து அதன் மூலம் கிட்டத்தட்ட 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சுமார் ரூ.500 கோடியை முதலீடு செய்து ஷெராப் குழும நிறுவனத்துடன் திமுக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
10) தமிழகத்தில் ஆடை மற்றும் தையல் திட்டங்களை அமைத்து அதன் மூலம் கிட்டத்தட்ட 3,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில், சுமார் ரூ.500 கோடியை முதலீடு செய்து ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
11) தமிழகத்தில் உணவு பதப்படுத்தக்கூடிய திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர, சுமார் ரூ.100 கோடியை முதலீடு செய்து டிரான்ஸ்வேல்டு குழுமத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் சுமார் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 4,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை திமுக அரசு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்கள் வரையில் மட்டும் தமிழகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பிற்கு திமுக அரசின் சிறப்பான செயல்பாடே காரணம். திமுக அரசு தமிழகத்தில் பதிவியேற்ற சில மாதங்களிலேயே தொழித்துறையில் இவ்வளவு சாதனைகளை செய்தது மட்டுமல்லாது, தமிழக மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கத்தோடு திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.