கோவை: கோவை அருகே தமிழ்நாடு கேரளா எல்லையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளமாநிலம் பாலக்காடு அடுத்த சிற்றாலம்சேரியில் ஆலத்தூர், கொல்லம்கொடு, பாலக்காடு காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்களம் டம் பகுதியை சேர்ந்த சுதேவன் என்பவர் குடோனில் 336 சாக்குமூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இவற்றின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுதேவன் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித், மனோஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த குட்கா பொருட்கள் ஆலத்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாணகிரியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்த போது கார் ஒன்றில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து 940கிலோ குட்கா உள்பட 1450கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 15லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக நான்கு பேரை கைதுசெய்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 13ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய ஒருவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.