பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் புதுமனையை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பழச்சாறு கடையில் வேலை செய்துள்ளார். அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் தாய் மாமனுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 24ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில், பள்ளிகொண்டா போலீசார் இளம்பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிய ஒதியத்தூரை சேர்ந்த கோகுல் (26) என்பவரை அழைத்து விசாரித்தனர்.
அதில், கோகுல் பள்ளிகொண்டா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். இவர் 3 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 2 வயதில் ஒரு மகனும், தற்போது மனைவி 6 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவிக்கும், இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில், தோழிக்கு கோகுல் மீது காதல் மலர்ந்துள்ளது. கோகுலும், இளம்பெண்ணை தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளார். அவர்தான் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பழச்சாறு கடையில் வேலை வாங்கி தந்துள்ளார்.
இருவரும் ஒன்றாக பணிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். கள்ளக்காதல் விஷயம் தெரியவர கணவரையும், தோழியையும் கோகுலின் மனைவி கண்டித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையறிந்து, கர்ப்பிணி மனைவியையும், 2 வயது மகனையும் தவிக்க விட்டு, கள்ளக்காதலியுடன் கோகுல் ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது, இளம்பெண் ஏதாவது ஒரு கோயிலில் தனக்கு தாலி கட்டும்படியும் இல்லாவிட்டால் விஷம் குடித்து, ‘என் சாவுக்கு நீ தான் காரணம்’ என எழுதி வைத்துவிட்டு இறந்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் பயந்து போன கோகுல் கடந்த 25ம் தேதி குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இளம்பெண் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை தங்க வைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால், போலீசார் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் செல்லும்படி அறிவுரை கூறினர். ஆனால் இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கோகுல் எனக்கே சொந்தம் என்றும் உரிமை கொண்டாடி அழுது புரண்டு காவல் நிலையத்தையே களேபரமாக்கியுள்ளார். இதனிடையே கோகுலின் கர்ப்பிணி மனைவி, 2 வயது மகனை இளம்பெண்ணின் காலடியில் போட்டு கணவனை எனக்கு கொடுத்துவிடு என மன்றாடியது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
இதற்கு ஒரு தீர்வு காண நினைத்த எஸ்ஐ ராஜகுமாரி, இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் கர்ப்பமாக இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கோகுலை கைது செய்வதாக போலீசார் எச்சரிக்கவே தாலியை கூட கழற்றி தரேன். அவரை சிறையில் தள்ளிடாதீங்க என்று தேம்பி, தேம்பி அழுதுகொண்டே தாலியை கோகுலிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 3 மணி நேரமாக சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் எச்சரித்தால் தாலியை கூட கழற்றி தரேன். அவரை சிறையில் தள்ளிடாதீங்க என்று தேம்பி, தேம்பி அழுதுகொண்டே தாலியை கோகுலிடம் ஒப்படைத்தார் இளம்பெண்.