திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: பக்தர்கள் கவனத்திற்கு!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை பிஎப்7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதியில் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்த காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது.

திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் 70,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முதற்கட்டமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் திருப்பதியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, புதுச்சேரியல் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புத்தாண்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.