நியூயார்க்,-அமெரிக்காவில் வீசும் பனி சூறாவளி காரணமாக, உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்தது.
அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக கடும் பனி சூறாவளி வீசுகிறது. இதனால், நாடு முழுதும் பனிக்கட்டியால் உறைந்து கிடக்கிறது. இந்த கடும் சூறாவளிக்கு நேற்று வரை, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் உறைந்து கிடக்கின்றன.
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியும் பனிப்பாறையாக உறைந்துள்ள ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. உறைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சில இடங்களில் மட்டும், பனிப்பாறைக்கு கீழ்ப்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.
அமெரிக்காவில் இதற்கு முன் பல முறை நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைந்துள்ளது. அப்போது, மக்கள் பனிப்பாறையில் நடந்து சென்று மகிழ்வர். கடந்த, 1912ல் இப்படி சிலர் நடந்து சென்றபோது, திடீரென பனிப்பாறை உருகி, நீர்வீழ்ச்சியில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பனிப்பாறையில் நடக்க தடை விதிக்கப்பட்டது. உறைந்து கிடக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியை ஏராளமானோர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement