புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சீனாவில் நாள்தோறும் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் என்றும் அடுத்த 3 மாதங்களில் 90 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்படுவர் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நடைபெற்றது. கரோனா சிறப்பு வார்டுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் தயார் நிலை, மருந்துகள், பாதுகாப்பு ஆடைகள், பாதுகாப்பு உபகரணங்களின் கையிருப்பு, அவசர சிகிச்சை மையத்தில் வென்டிலேட்டர்களின் தயார் நிலை, சீரான ஆக்சிஜன் விநியோகம், ஆய்வக வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தூய்மை பணியாளர்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, “கரோனாதொற்று அதிகரித்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் வெற்றிகரமாக ஒத்திகை நடத்தப்பட்டு இருக்கிறது” என்று தெரி வித்தார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா லோக் நாயக்ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கானதயார் நிலை தொடர்பாக ஒத்திகைநடத்தப்பட்டது. லக்னோவில் உள்ளமருத்துவமனையில் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார். மத்திய பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.