தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கனின் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கக்கனின் குடும்பத்தினர் பங்கு பெற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, “கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஜே.பி நட்டா, `காங்கிரஸ் ஊழல் கட்சி, குடும்பத்துக்காகச் செயல்படும் கட்சி, அதுதான் அவர்களின் கொள்கை’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ், இந்த நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம், வளர்ச்சிக்காக உழைத்த கட்சி. காங்கிரஸ் நாட்டுக்காக மூன்று தலைவர்களை இழந்திருக்கிறது. வேறு எந்தக் கட்சி, நாட்டுக்காக மூன்று உயிர்களை இழந்திருக்கிறது? சொந்த காரணங்களுக்காக அவர்கள் உயிரைவிட்டார்களா?
அவர்கள் இருந்தால், இந்தியா வளமடைந்துவிடும் என்ற அச்சத்தினால் கொல்லப்பட்டார்கள். நட்டாவோ, அந்தக் கட்சியின் தலைவர்களோ இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஒரு மணி நேரமாவது சிறைக்குச் சென்றிருப்பார்களா? எங்களை விமர்சிப்பதற்கு இவர்கள் யார்?
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தேர்தலில் நின்று மக்களின் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்கள். நியமனத்தால் வரவில்லை. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? தமிழுக்காக அதிக நிதி கொடுத்திருக்கிறோம் என்று ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார்… இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் 6 இருக்கின்றன. ஐந்து மொழிகளுக்கு வழங்கப்படும் நிதியைவிட 21,000 பேர் பேசும் சம்ஸ்கிருதத்துக்கு 22 சதவிகிதம் அதிக நிதி மோடி ஆட்சியில் வழங்கப்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற அணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.

அ.தி.மு.க இரண்டு பிரிவுகளாக உள்ளது, அதில் எந்த பிரிவில் நீங்கள் (பா.ஜ.க) இருக்கிறீர்கள்… இதைப் பற்றி எல்லாம் விளக்கமளிக்கத் தயாராக இல்லாத பா.ஜ.க-வினர் தேர்தலைப் பற்றி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. நாட்டை பிரிக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. நாட்டை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் செய்கிறது. எங்களைப் பற்றி பேச பா.ஜ.க-வுக்கு என்ன தரம் இருக்கிறது?” என்று காட்டமாக விமர்சித்தார்.