நிலங்கள் பிடுங்கப்படுவது தமிழர்களிடம்; வேலை மட்டும் வேறு மாநிலத்தவருக்கா?… கொந்தளிக்கும் சீமான்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய அரசு தற்போது 3,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக தெரிகிறது.

இது விண்வெளி தொழில்நுட்ப பணிகளுக்காகவும், ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இப்படித்தான் ஏற்கனவே பல நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்கினர். சொகுசாக காரில் சென்றால் போதுமா? விளை நிலங்களை அழித்துவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன வழி? மேலும் இங்கிருந்து நிலங்களை கையகப்படுத்தி விட்டு வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கு வழங்குகின்றனர். 

தற்போது நாம் போராடிய பிறகு இங்கு தொடங்கப்படும் நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடுப்போம் என்று அறிவிக்கின்றனர். எனவே நமது போராட்டம் வெற்றி பெற்றதாகத்தான் கூற வேண்டும். கிருஷ்ணகிரியில் இயற்கை உருவாக்கிய மலைகள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

மலை இருந்தால்தான் மழை வரும். மழை பெய்தால்தான் விவசாயம் நடக்கும். விவசாயம் நடந்தால்தான் உணவு கிடைக்கும். இயற்கையாக கிடைக்கும் எல்லாவற்றையும் அழித்து விட்டால் எதிர்காலத்தில் உணவுக்கு கையேந்து நிலை ஏற்படும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.