பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் உலகப் பிரசித்தி பெற்றது. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் பஞ்சாமிர்தம் வாங்கிச் செல்வது வழக்கம். தற்பொழுது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
அதே போன்று தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் தைப்பூச யாத்திரை காரணமாக முருக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பழனி முருகன் கோவில் தேவஸ்தான கடைகளில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.35 மற்றும் ரூ.40 என இரண்டு விதமான பாட்டில்களில் விற்கப்படுகிறது. பழனி தேவஸ்தான கடைகளில் நாளொன்றுக்கு 1.4 லட்சம் பஞ்சாமிர்த பாட்டில்கள் விற்பனையாகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் பஞ்சாமிர்த பாட்டில்கள் தீர்ந்து விட்டன. இதனால் பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். தேவைக்கு ஏற்ப கடைகளுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.