லாகூர்,-பாகிஸ்தானில், மூன்று திருநங்கையரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முன்னாள் அமைச்சர் அஜ்மல் சீமாவின் மகன் அஹமது பிலால் சீமா. இவர், ௨௦௦௮ல் சியால்கோட்டில் உள்ள பண்ணை வீட்டில் தன் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
இதில், நடனமாடுவதற்காக திருநங்கையர் மூன்று பேரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவருடைய மற்றும், அவரது நண்பர்கள் விருப்பப்படி நடனமாடாததால், மூன்று திருநங்கையரையும் பிலால் சீமா சுட்டுக் கொன்றுவிட்டார்.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற அவர், கடந்த ஜூலையில் பாகிஸ்தான் திரும்பியுள்ளார். அப்போது, அவரை விமான நிலையத்தில் கைது செய்த போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஜஸிலா அஸ்லாம் நேற்று அஹமது பிலால் சீமாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், கொலையானவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ௧ லட்சத்து ௮௨ ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement