புதுச்சேரியில் முழு அடைப்பு ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக போராட்டம்: வாகனங்கள் உடைப்பு; 100 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு, மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெற்றது. புதுவை நகர பகுதியில் வணிக நிறுவனங்கள், மால், கடைகள், உணவகங்கள் உட்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகம், சிறிய கடைகள், காய்கறி  கடைகள், சாலையோர உணவங்கள் இயங்கியது. ஒருசில இடங்களில் மது கடைகள் திறக்கப்பட்டிருந்தன. காய்கறி கடைகள் மட்டும் இயங்கியது. திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. புதுவை அரசு பஸ்கள் கூட குறைந்த அளவு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. அதேபோல், தமிழக பேருந்துகள் அனைத்தும் புதுவை மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. மதியத்துக்கு பிறகு அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கின. 2 தமிழக அரசு பஸ்கள் மற்றும் 6 டெம்போக்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதுதொடர்பாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கரிக்குடோனில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.