புதுச்சேரி: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி வணிக திருவிழா–2023வரும் 5ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி மாநில வரி வருவாய் சுற்றுலா துறையை நம்பியே உள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், வியாபாரம், ஓட்டல்கள், போக்குவரத்து மூலம் வரி வருவாய் உயர்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்கள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை வருகையை அதிகரிக்க ஆண்டு தோறும் சுற்றுலாத்துறை மூலம் வணிக திருவிழா நடத்தி பரிசுகள் வழங்கி வந்தது.
நிதி நெருக்கடி மற்றும் நிர்வாக குழப்பம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு வணிக திருவிழா நடத்தப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வணிக திருவிழா நடத்த அரசு முடிவு செய்து, சுற்றுலாத்துறை அதற்கான திட்டத்தையும் உருவாக்கியது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், செயலர் குமார், இயக்குநர் பிரியதர்ஷினி, வர்த்தக சபை தலைவர் குணசேகரன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வணிக திருவிழா ஜனவரி 5ம் தேதி முதல் பிப்., 20ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. வணிக திருவிழாவில் பங்கேற்கும் கடைகள் ரூ. 2,000 உறுப்பினர் கட்டணமாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பரிசு கூப்பன் 10 ரூபாய். 100 பரிசு கூப்பன் கொண்ட புத்தகத்தை 1,000 ரூபாய்க்கு வணிக நிறுவனங்களுக்கு அரசு வழங்கும். இந்த கூப்பன்களை வணிக நிறுவனங்கள் தங்களிடம் பொதுமக்கள் வாங்கும் பில் தொகைக்கு ஏற்ப இலவசமாக வழங்குவர். விழாவின் விளம்பரம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செலவினங்களுக்கு அரசு சார்பில், ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது.

பரிசுகள்
குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு பம்பர் பரிசாக 75வது சுதந்திர தின ஆண்டை குறிக்கும் வகையில் 75 சவரன் (அரை கிலோ) தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள் முதல் பரிசாகவும், இரண்டாவது பரிசாக ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டர் 40 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
மூன்றாவது பரிசாக ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 200 மொபைல் போன்களும், 4ம் பரிசாக ரூ. 2,000 மதிப்புள்ள 2,000 சமையல் அறை பொருட்களும், 5ம் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள 20 ஆயிரம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மொத்த பரிசுகளின் எண்ணிக்கை 22,261. இதன் மொத்த மதிப்பு ரூ. 2.5 கோடி.
100 கோடி இலக்கு
வணிக திருவிழா கூப்பன்கள் 20 லட்சம் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.500க்கு பொருட்கள் வாங்கும் ஒரு நபருக்கு 1 கூப்பன் வினியோகித்தாலும், 20 லட்சம் கூப்பன் வழங்கப்படும் போது, குறைந்த பட்சம் ரூ. 100 கோடிக்கு வியாபாரம் நடைபெறும். இதன் மூலம் மாநில அரசுக்கு 9 சதவீதம் ரூ. 9 கோடியும், மத்திய அரசுக்கு 9 சதவீதம் வீதம் ரூ. 9 கோடி என மொத்தம் ரூ.18 கோடி வரி வருவாய் கிடைக்கும்.
வணிக திருவிழாவையொட்டி அலங்கார வளைவு, மின் விளக்கு அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வணிக திருவிழா பரிசுகளை அறிவித்த முதல்வர் ரங்கசாமி, விழா தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டார்.
வியாபாரிகள் கோரிக்கை
நேரு வீதியில் ஒரு பக்க பார்க்கிங் இடபற்றாக்குறையால் வெகு தொலைவில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைக்கு வர பொதுமக்கள் தயங்குகின்றனர். இதனால், விழா காலத்தில் மட்டும் இரு பக்க பார்க்கிங் முறையை அமல்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்