புத்தாண்டில் அவசியம் எடுக்க வேண்டிய எட்டு நிதித் தீர்மானங்கள்..!

புது வருடம் 2023 பிறக்கப்போகிறது. இந்தப் புத்தாண்டில் சில தீர்மானங்களை எடுத்து பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அவரின் வாழ்க்கையை வளமாக்க முடியும். அப்படிப்பட்ட முக்கியமான எட்டு நிதித் தீர்மானங்களைப் பார்ப்போம்.

1. உங்கள் சொத்து மற்றும் கடன்களைக் கணக்கிடுங்கள்..!

நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யும் முன் தற்போதைய உங்கள் சொத்து மற்றும் கடன்களைக் கணக்கிடுங்கள்.

 அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன்கள் இருந்தால் அவற்றை முழுமையாக அடைக்க அல்லது குறைக்க முதல் தீர்மானம் போடுங்கள்.

நிதித் திட்டமிடல்

2. நிதி இலக்குகள்

 உங்கள் நிதி இலக்குகளை (Financial Goals) அடையாளம் கண்டு அவற்றை அடைவதற்கான முதலீட்டுத் திட்டங்களைத் திட்டமிடுங்கள். நிதி இலக்குகள், பிள்ளைகளின் உயர்கல்வி, சொந்த வீடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சில ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தால், வீட்டுக் கடன் வாங்குவதற்கான முன் பணத்தை (Down Payment) திரட்ட புத்தாண்டில் திட்டமிடுங்கள்.

3. வரவுக்குள் செலவு..!

 உங்கள் செலவுகளை வரவுக்குள் வைத்திருக்க தீர்மானம் போடுங்கள். இப்படி செய்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலை எப்போதும் உருவாகாது.

 உங்கள் செலவுகள் வரவுக்குள் இருந்தால், அது உங்கள் நிதி இலக்குகளை விரைவாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

கிரெடிட் ஸ்கோர்

4. கிரெடிட் ஸ்கோரை கவனியுங்கள்..!

இன்றைய நவீன உலகில் கிரெடிட் ஸ்கோர் என்கிற கடன் மதிப்பெண் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்பதை மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை பாருங்கள். இப்போதெல்லாம் கிரெடிட் ஸ்கோரை ஆண்டுக்கு சில முறை இலவசமாகவே பார்க்க முடியும். குறைவாக இருந்தால் அதை அதிகரிக்கப் பாருங்கள். கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்பட்சத்தில் எந்தக் கடனையும் சுலபமாகவும் குறைந்த வட்டியிலும் பெற முடியும். பொதுவாக, 750-க்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

5. உடல் நலத்துக்கான சேமிப்பு..!

நோய்வாய்ப்படும்போது அல்லது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதுதான் நம்மில் பலருக்கு மருத்துவக் காப்பீடு பற்றிய நினைவு வரும்.

 மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் கவரேஜ் போதுமானதாக இல்லை என்றால் அதிகரியுங்கள். டாப்அப் பாலிசி எடுப்பது மூலம் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும். இதுவரைக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்றால் உடனே எடுத்துவிடுங்கள்.

மருத்துவக் காப்பீடு அவசர மருத்துவ செலவுக்கு கைகொடுக்கும் என்பதோடு நிதி நெருக்கடியிலிருந்து குடும்பத்தினரை பாதுகாக்கும்.

ஆயுள் காப்பீடு

6. ஆயுள் காப்பீடு

அடுத்து, குடும்பத்தை நிதி ரீதியாக பாதுகாக்கும் கவசமான ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருப்பது அவசியம். இதுவரைக்கும் எடுக்கவில்லை என்றால் மிகவும் பிரீமியம் குறைவு மற்றும் அதிக தொகைக்கு கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்குக்கு கவரேஜ் கிடைக்கும்படி டேர்ம் பிளான் எடுக்க தீர்மானம் போடுங்கள். ஏற்கெனவே டேர்ம் பிளான் இருந்தால், அதன் கவரேஜ்ஜை ஆண்டு சம்பளத்தின் 15 மடங்கு அளவுக்கு அதிகரிகந்த் தீர்மானியுங்கள்.

7. அவசர கால நிதி அவசியம்..!

அவசர தேவைக்காக தனியே பணம் போட்டு வைக்கத் தீர்மானம் போடுங்கள். வேலை இழப்பு, மருத்துவ அவசரத் தேவைகள் போன்றவை உங்கள் தனிப்பட்ட நிதிகளை எளிதாக பாதிக்கக்கூடும்.

குடும்ப மாத செலவுகளைப்போல் 6 முதல் 8  மடங்கு தொகையை அவசர கால நிதியாக வைத்திருப்பது சிறந்தது. கோவிட் பாதிப்புக்குப் பிறகு, இதை 12 மடங்கு முதல் 18 மடங்கு என அதிகரித்து வைத்திருப்பது நல்லது எனப் பலரும் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். இதில், கடன் மாதத் தவணை தொகை, ஆர்.டி. எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையும் சேரும். இந்தத் தொகை கஷ்டமான காலங்களில் நிலைமையை சமாளிக்க உதவும் படி சேமிப்பு வங்கிக் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எளிதில் எடுக்கும்படி போட்டு வைக்க வேண்டும்.

கட்டுரையாளர்: ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com

8. கடைசி காலத்துக்காக இளமையிலேயே சேமிக்கவும்..!

இன்றைய தேதியில் பென்ஷன் என்பது பெரும்பாலானோருக்கு இல்லை. இதனால், பலரும் டென்ஷனாக இருக்கிறார்கள். இந்த நிலையை தவிர்க்க பணி ஓய்வுக் காலத்துக்காகப் பணிக் காலத்திலே சேமிக்கத் தொடங்குகள்.

உங்கள் சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படுகிறது என்றால், அதை இந்த ஆண்டு முதல் வி.பி.எஃப் மூலம் அதிகரியுங்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வாருங்கள். இதன் மூலம் வருமான வரிச் சலுகை வேறு கூடுதலாக கிடைக்கும்.  முதலீட்டுக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றால் மியூச்சுவல் ஃபண்ட், ரிட்டயர்மென்ட் பிளான்களில் முதலீடு செய்து வாருங்கள்.

ஓய்வுக் காலத்துக்காக சேமிப்பது, உங்கள் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது. பொது சேமநல நிதி (பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட்), ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதிய  திட்டங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்) போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்து வரலாம்.

இந்த எட்டு நிதித் தீர்மானங்களை எடுத்து நிறைவேற்றும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கை வளமானதாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.