வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் மூக்குவழி கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‛இன்கோவாக்’ கோவிட் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தினை பூஸ்டர் டோஸோக செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பூசியை பூஸ்டர் டோஸோக மூக்கு வழியாக எடுத்துக்கொள்ளலாம்.
கோவின் தளத்திலும் இந்த தடுப்பு மருந்து பட்டியலிடப்பட்டுள்ளது. மருந்தின் விலையாக அரசுக்கு ரூ.325ம், தனியாருக்கு ரூ.800ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி இறுதியில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இன்கோவேக் தடுப்பூசி பற்றி நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவராக உள்ள அரோரா கூறியதாவது: இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மூக்கு வழி செலுத்தும் மருந்து மொத்தம் நான்கு சொட்டுகளாக வழங்கப்படுகிறது. மொத்தம் 0.5 மில்லி மருந்து செலுத்தப்படும். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பு மருந்து.

இந்த தடுப்பு மருந்து செலுத்தி கொண்டாலும் கூட மற்ற தடுப்பூசிகளை செலுத்திய பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் காத்திருப்பதை போல் நாம் காத்திருக்க வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வைரசின் தாக்கம் சுவாசத்தை பாதிக்கும் நிலையில் இது நல்ல பலனை கொடுக்கிறது. கோவிட் மட்டுமின்றி சுவார பிரச்னையை ஏற்படுத்தும் அனைத்து வைரஸ் மற்றும் தொற்றுநோய்களுக்கும் இது ஒரு சிறந்த முறையாகும்.
இந்தியாவில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூக்கு வழியாக வழங்கும் தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள முடியாது. அத்தகைய நபர்களுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுவது இல்லை.
அதாவது, ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் இந்த இன்கோவாக் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது. மேலும் இந்தியாவில் நான்காவது டோஸை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement