பொங்கலுக்கு 1000 ரூபாய் ரொக்கப் பரிசு ஏன்? அமைச்சர் விளக்கம்!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் போர்படை தளபதியாக விளங்கிய மாவீரன் பொல்லானின் 254 வது பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா, செலம்பகவுண்டன் பாளையத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் பொல்லான் திரு உருவப்படத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

மாவீரன் பொல்லான் வரலாறு மிகப் பெரும் வரலாறு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து தீரன் சின்னமலையோடு இணைந்து அவர்களிடத்தில் போரிட்டு வெற்றி பெற்றவர் மாவீரன் பொல்லான். அவருக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவீரன் பொல்லானுக்கு மரியாதை செய்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மணிமண்டபமும் அவரது சிலையும் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அடுத்த ஓராண்டிற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் தவறு நேர்ந்து விடக்கூடாது. மக்களுக்கு வாங்கித் தருவதில் ஆங்காங்கே ஒன்றிரண்டு பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட நிலை எந்த குடும்பத்திற்கும் வரக்கூடாது என்பதால் தான் பணமாக கொடுக்கின்றோம். பணமாக கொடுத்தால் தேவைப்பட்ட பொருளை அவர்களாக வாங்கிக் கொள்வார்கள். பொருளாக வாங்கி கொடுத்து திணிப்பதை விட விரும்பியதை வாங்கிக் கொள்ளட்டும் என பணமாக கொடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே சில சிறு குறைபாடுகள் ஆங்காங்கே இரண்டொரு இடத்தில் நடைபெற்றது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கொடுக்கும்போது இதுபோன்று சிறு தவறு நடைபெறுவது தவிர்க்க முடியாது. இந்த நிலையும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலமைச்சர் பணமாக கொடுக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார். கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை என்றாலும் பொதுமக்கள் வாங்கிக் கொள்வார்கள். அரசிடம் இந்த திட்டம் இல்லாத போதும் கூட கரும்புகளை விவசாயிகள் விற்பனை செய்தார்கள் பொதுமக்களின் நன்மையை கருதி அவர்களின் விருப்பம் போல் வாங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான் பணமாக தருகின்றோம். பொதுமக்கள் தேவைப்படும் கரும்புகளை அவர்களாக வாங்கிக் கொள்வார்கள். இதனால் விவசாயிகள் கரும்பு தேக்கமடையாது என்று அமைச்சர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம், மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி, தென்னரசு, பாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முன்னாள் எம்பி செல்வகுமார் சின்னையன், முன்னாள் அமைச்சர் பி சி ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கங்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.