தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த டிச.22ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவ்வாறு அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் பொங்கல் பரிசு உடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் “பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு செங்கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையை விவசாயிகள் பயிரிட்டனர்.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறாதது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தனியார் ஏஜெண்டுகளுக்கு குறைந்த விலையில் கரும்பு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரும்பு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். பொங்கல் பண்டிகையையும் கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்க கோரி கடந்த டிச.24ம் தேதி தமிழக அரசிடம் மனு அளித்தேன்.
அதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்” என மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.