சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டிச.30 முதல் ஜன.4 வரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடர்பாக எழிலகத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மற்றும் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியது: பொங்கலுக்கு முதல்வர் அறிவித்த ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை விநியோகிக்கும் பணிக்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜன.2, 3, 4 ஆகிய 5 நாட்களில் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்குவார்கள். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் தெரிவிக்கப்படும். பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்.
பொங்கல் தொகுப்புக்காக 3 லட்சம் டன் அரிசி, இந்திய உணவுக் கழகம் வாயிலாக, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே குறுவையில் 8.5 லட்சம் டன் அரிசி கொடுத்துள்ளோம். மத்திய அரசு, ஒரு கிலோ ரூ.8 என்ற அடிப்படையில் தமிழகத்துக்கு அரிசி வழங்கியது. ஆனால் சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக வாங்குகிறோம்.
மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாதவர்கள், கைரேகை வைக்க முடியாதவர்கள், தங்களுக்கு மாற்றாக யார் ரேஷன் கடைக்கு செல்கிறார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் மாற்று நபரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். வீட்டில் இருக்கும் யார் வேண்டுமானாலும் வந்து பொருள் வாங்கிக் கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு வாங்க முடியாதவர்கள், பொங்கலுக்குப் பிறகு வாங்குவதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். டோக்கன் வழங்கப்படும் நேரத்தில் மற்ற பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
இதற்கிடையே, டோக்கன் வழங்கிய பின், நகர்ப்புறங்களில் தினசரி 300 பேருக்கும், கிராமப்புறங்களில் 200 பேருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விரல் ரேகை பதிவு பெற்று அதன் அடிப்படையில்தான் பொருட்களை வழங்க வேண்டும். அதில் சிக்கல் ஏற்பட்டால் இதர முறைகளைப் பின்பற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்தவும், மாவட்டம்தோறும் பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டறை மற்றும் ரோந்துக் குழுக்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர முடியாதவர்கள் மாற்று நபரை அனுப்புவது குறித்து அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் அவரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.