மதுரை: ‘காவல் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பலனில்லை. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும்’ என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மினி வேனை விடுவிக்குமாறு, உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதேபோல் தங்கப்பாண்டியன் மற்றும் சரவணக்குமார் ஆகியோரும், தங்களது வாகனங்களை விடுவிக்கக் கோரி மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களை நீண்ட காலத்திற்கு காவல் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பிணை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டு பறிமுதல் வாகனங்களை திரும்ப ஒப்படைக்கலாம் என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனடிப்படையில் மனுதாரர்களின் வாகனங்களை சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக விடுவிக்க வேண்டும். பிரபாகரன் தரப்பில் ரூ.5 ஆயிரம், தங்கப்பாண்டியன் தரப்பில் ரூ.7,500, சரவணக்குமார் ரூ.3,000 திரும்ப பெறாத வகையில் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு டெபாசிட் செய்ய வேண்டும். இதை நீதிமன்ற அடிப்படை வசதிக்கு செலவிட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.