திருச்சி: மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் ரூ.1,350 கோடியில் புதிதாக கட்டிய 2ம் யூனிட் மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை மொண்டிப்பட்டி காகித ஆலையில் நாளை (29ம் தேதி) நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 9.30 மணியளவில், சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வருகிறார். அவருடன் அமைச்சர் உதயநிதியும் வருகிறார். முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் முதல்வர், அண்ணா விளையாட்டரங்கம் செல்கிறார். அங்கு ரூ.655 கோடி மதிப்பில் 5,639 புதிய திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.309 கோடியில் 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.79 கோடியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியில் காலை 11.30 மணியளவில் புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு காகித ஆலையின் 2ம் அலகையும், சிப்காட் தொழிற்பூங்காவையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இங்கு 2ம் அலகு மற்றும் தொழிற்பூங்கா மொத்தம் ரூ.1,350 கோடியில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் பிற்பகல் 3 மணியளவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரிக்கிறார். பின்னர் இத்திட்டத்தின் மகத்தான சாதனை நிகழ்வாக 1 கோடியே 1வது பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு அண்ணா விளையாட்டரங்கத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விழாவை முடித்து கொண்டு மணப்பாறை மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் ஆலைக்கு புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி அரிஸ்டோ அம்பேத்கர் சிலையில் இருந்து மொண்டிப்பட்டி வரை சுமார் 40கி.மீ. தூரம் வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி நடப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட உள்ளது.