தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சித்தார்த், இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்லதொரு வரவேற்பு இருந்து வருகிறது. படங்களில் எப்படி பிசியாக இருப்பாரோ அதேபோல சமூக வலைத்தளங்களிலும் இவர் படு ஆக்டிவாக இருப்பார். எவ்வித பயமுமின்றி தனது சமூக வலைதள பக்கங்களில் தனக்கு தோன்றும் கருத்துக்களை துணிச்சலோடு பதிவிடுவார். அடிக்கடி இவரது சமூக வலைதள பதிவுகள் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது.
சித்தார்த் தனது பெற்றோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் இவர்களை ஹிந்தியில் பேச வற்புறுத்தியும், இதற்கு மறுத்ததால் கூட்டமே இல்லாத விமான நிலவியது சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்களை காக்க வைத்து கடுமையாகவும் நடந்து கொண்டுள்ளனர். இதனை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவரது பதிவில், காலியான மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். வயதில் முதிர்ந்த என்னுடைய பெற்றோர்களின் பையிலிருந்த நாணயங்களை அகற்றுமாறு அவர்கள் வற்புறுத்தினார்கள். நாங்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேசும்படி வேண்டினோம், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே தான் பேசிக்கொண்டிருந்தனர்.
தங்களையும் ஹிந்தியில் பேச சொன்னதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம், அதற்காக அவர்கள் எங்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்கள். இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்கள், வேலையில்லாதவர்கள் தான் அதிகாரம் காட்டுகின்றனர் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது, இவரது பதிவிற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் இப்படத்தில் சித்தார்த்தின் கதாபாத்திரம் பற்றி படக்குழு தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.