தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் த்ரிஷாவிற்கு அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களின் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. மேலும் மேலும் தன்னையும், தனது நடிப்பையும் மெருகேற்றி கொண்டே சென்று அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்து நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் குந்தவையாக நடித்த இவரது அழகை காண கண்கோடி வேண்டும் இன்றி ரசிகர்கள் போற்றி புகழ்ந்தனர். சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா தற்போது ராங்கி படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரில் த்ரிஷாவை கண்டு ரசிகர்கள் மிரண்டுவிட்டனர்.
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சரவணன் தான் த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், கோபி கண்ணதாஸன், லிஸ்ஸி ஆண்டனி, ஜான் மகேந்திரன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 30ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வரும் த்ரிஷா தன்னை பற்றி எழும் சர்ச்சைகளுக்கும், கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்து வருகிறார்.
சமீப காலமாகவே திரிஷா காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தது, தற்போது இந்த வதந்திகளுக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், தனக்கும் அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றும், தனக்கு 1 சதவீதம் கூட அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கேள்விகளுக்கு பதிலளித்தவர், தனக்கு அஜித் மற்றும் விஜய் இரண்டு பேரையும் பிடிக்குமென்றும் அவர்களது படங்களை ஒரு ரசிகையாக விரும்பி பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். அதோடு திருமணம் எப்போது என்கிற கேள்வி தனக்கு பிடிக்காது என்றும் இனிவரும் காலங்களில் தன்னிடம் திருமணம் குறித்த கேள்வியை கேட்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.