புதுடெல்லி: ராவணனின் பாதையை பாஜக பின்பற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து கடந்த திங்கள் கிழமை பேசிய சல்மான் குர்ஷித், வட இந்தியா குளிரில் நடுங்கும் நிலையில் வெறும் டி. ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு ராகுல் காந்தி யாத்திரையை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பகவான் ராமரைப் போல தெய்வீக குணத்துடன் ராகுல் காந்தி இருப்பதை இது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாடியா கண்டனம் தெரிவித்திருந்தார். “ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றம் வழங்கிய பிணை காரணமாக தற்போது வெளியே இருப்பவர் ராகுல் காந்தி. அவரை ராமபிரானுடன் ஒப்பிடுவது கடும் கண்டனத்திற்கு உரியது. ஓட்டுக்காக காங்கிரஸ் எத்தகைய அரசியலையும் செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சல்மான் குர்ஷித்தின் பேச்சு அப்பட்டமான முகஸ்துதி.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், பாஜகவின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். “ராகுல் காந்தி ராமர் அல்ல. அதேநேரத்தில் அவர் ராமரின் பாதையை பின்பற்றி நடக்க முடியும். ராமரின் பாதையை பின்பற்ற எங்களுக்கு உரிமை இல்லை என பாஜக கூறுகிறது. ராமரின் பாதையை பின்பற்றாமல் ராவணனின் பாதையை பின்பற்றுபவர்கள் இவ்வாறு கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.” என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.