மதுரை: விஎச்பி வாகன யாத்திரைக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் ஏ.பாரத் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக மக்கள் மத்தியில் வேண்டுதல் மற்றும் விரதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜன.1 முதல் 17-ம் தேதி வரை விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் வாகன யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகன யாத்திரை திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கி தென் மாவட்டங்களுக்கு சென்று திருச்சி ஜன.17-ல் விராலிமலையில் நிறைவடைகிறது. யாத்திரை வாகனத்தில் முருகன் சிலையும், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் துறவிகள் இருப்பர்.
யாத்திரைக்கு அனுமதி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் யாத்திரை செல்லும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அனுமதி தரவில்லை. இதனால் அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தோம். இந்நிலையில் விஎச்பி வாகன யாத்திரைக்கு அனுமதி மறுத்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து விஎச்பி வாகன யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து, போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.2-க்கு ஒத்திவைத்தார்.