விமானத்தில் தவற விட்ட பேக்: மீண்டும் கோரிக்கை வைத்த முகமது சிராஜ் – விரைவில் கண்டுபிடித்து தருவதாக விஸ்தார நிறுவனம் பதில்

புதுடெல்லி,

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடியது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்திய டெஸ்ட் அணியில் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் இடம் பெற்றிருந்தார். இவர் போட்டி முடிந்தவுடன் டாக்காவில் இருந்து ஏர் விஸ்தாரா விமானத்தில் இந்தியா திரும்பியுள்ளார். அப்போது விமானத்தில் தனது பேக்கை தவறவிட்டு விட்டார்.

இந்த நிலையில், விமானத்தில் தவறவிட்ட தனது பேக்கை திருப்பி தருமாறு ஏர் விஸ்தாரா விமானத்தின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து முகமது சிராஜ் டுவிட் செய்துள்ளார்.

அந்த பதிவில், அதில் (தவறவிட்ட பேக்) என்னுடைய முக்கியமான பொருட்கள் உள்ளன. விரைவான நடவடிக்கை எடுத்து ஐதராபாத்தில் உள்ள பேக்கை திருப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். என அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில் , “நான் டாக்காவிலிருந்து டெல்லி வழியாக மும்பைக்கு கடந்த 26 ஆம் தேதி யு.கே. 182 மற்றும் யு.கே 951 விமானத்தில் பயணம் செய்தேன். நான் மூன்று பேக்கை சோதனை செய்தேன், அதில் ஒன்று தவறி விட்டது. தவற விடப்பட்ட பை எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி தரப்படும் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஏர் விஸ்தாரா விமான நிறுவனம், சிராஜின் பேக்கை பாதுகாப்பாக திருப்பித் தருவதாக உறுதியளித்தது. ஆனால் அதன்பிறகும் எந்த தகவலும் இல்லாத காரணத்தினால் மீண்டும் அவர் டுவிட் செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், தவறவிட்ட பேக்கை கண்டுபிடிக்க தங்கள் ஊழியர்கள் முயற்சி செய்வார்கள் என விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள முகமது சிராஜ் தனது பேக் விரைவில் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.