புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, கடந்த 2 நாட்களில் இந்தியா வந்த 39 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவும் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. கோவிட் உறுதியான 39 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, விமான நிலையங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை(டிச.,29) ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, டில்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியம்!
இதனிடையே, அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், முந்தைய பாதிப்புகளை மேற்கொள்காட்டி, இந்த நாட்களில், இந்தியாவில் கோவிட் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 பேருக்கு கோவிட்
வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ல் துபாயில் இருந்து சென்னை வந்த ஒருவர், நேற்று, ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், மதுரை வந்த இரண்டு பேருக்கும் கோவிட் உறுதியாகி இருந்தது. துபாயில் இருந்து இன்று சென்னை வந்த இரண்டு பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இரண்டு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்