திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது:
வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் 92 கவுன்டர்கள் மூலம் வரும் ஜனவரி 1ம்தேதி முதல் சுமார் 4.50 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அதை பெற்ற பக்தர்கள் ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 1 மற்றும் 2 முதல் 11ம் தேதி வரை 2.5 லட்சம் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பக்தர்கள் வர வேண்டும்.
மாநிலத்தின் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் 10 நாட்களுக்கு 10 ஆயிரம் பேரை வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்து வைக்கப்பட உள்ளது. 10 நாட்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி ஷெட் உள்ளிட்ட பகுதிகளில் உணவு, குடிநீர், டீ, காபி வழங்கப்படும்.
நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்கும் சூழலில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. ‘புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசி காரணமாக டிசம்பர் 29ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 3ம்தேதி வரை தங்கும் விடுதிக்கான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 1ம்தேதி முதல் 11ம் தேதி வரை நேரில் வரும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
ஒரு விஐபிக்கு 2 அறைகள் மட்டுமே ஒதுக்கப்படும். ஜனவரி 2, 3ம் தேதிகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்று கொள்ளப்படாது. வைகுண்ட ஏகாதசியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வைகுண்ட துவாதசியையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 3.5 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்படும்.
பக்தர்களுக்கு தேவையான பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். 2 மலைப்பாதை சாலைகளும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும். திருமலையில் போக்குவரத்து பிரச்னையின்றி வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.