20 மாத ஆட்சியில் என்ன செய்தீர்கள் – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு சேலத்தில் இன்று நடந்தது. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ 2023ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கு இதுவே சான்று. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அதிமுகவின் 10 ஆண்டு பொற்கால ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் தந்தோம் என்று எண்ணி பார்க்கவேண்டும். சேலம் மாவட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி தந்தோம். மாவட்டத்தை பற்றி முழுமையாக அறிந்தவன் என்பதால் பல திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்மையான மாவட்டமாக மாற்றினோம்.

போக்குவரத்து நெரிசல் இல்லாத, குடிநீர் தட்டுபாடு இல்லாத மாவட்டம் சேலம் மாவட்டம். சட்டக்கல்லூரி நாம் கொண்டுவந்து அடிக்கல் நாட்டினோம். அதனை தி.மு.க.வினர் திறந்து வைக்கின்றனர். 8 வழிச்சாலை அமைக்கக்கூடாது என வேண்டும் என்றே விவசாயிகளை திமுக தூண்டிவிட்டது. மொத்தம் 8 சதவீத விவசாயிகள் தான் எங்களது நிலம் பாதிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 92 சதவீதம் பேர் நிலம் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். 

இன்னும் சொல்லப்போனால், திருவண்ணாமலை, திருவள்ளுவர், காஞ்சிபுரத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் ரூ.50 லட்சம் கேட்டார்கள். மார்க்கெட் மதிப்பு ரூ.90 லட்சம். ஆனால் அரசு 4 மடங்கு உயர்த்தி ரூ.2 கோடி கொடுத்தார்கள். இதனால் அங்கு சாலைக்கு நிலம் கொடுக்கின்ற விவசாயிகள் ஒன்று கூடி பாராட்டு விழா நடத்தினார்கள்.

எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு திட்டத்தை கொண்டு வருகின்றபோது வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. எதிர்ப்பது, அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் நல்ல திட்டம் என கூறி அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. இதனால் மக்கள் தான் பாதிக்கிறார்கள். இதுதான் திமுக ஆட்சி. இதுதான் திராவிட மாடல். 

நம்முடைய இரும்பாலை அருகில் ராணுவத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தேன். இன்றைக்கு ஸ்டாலின், மத்திய அரசிடம் இருந்து நிறைய திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்கிறோம் என பேசுகிறார்.

ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகி விட்டது. ஜனவரி 7-ந்தேதியுடன் 20 மாத ஆட்சி முடிவடைகிறது. 3ல் ஒரு பாக ஆட்சி முடித்துவிட்டார்கள். இந்த 20 மாத கால ஆட்சியில் என்ன செய்தீர்கள். மத்திய அரசிடம் பேசி பசுமைவழி சாலை பெற்றோம். அதிக இழப்பீடு தொகை அறிவித்தோம். மத்திய அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது மதிப்பை குறைத்து தந்தனர். இன்று மக்கள் நலனை பற்றி உணராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அவர்களுக்கு குடும்பம்தான் முக்கியம். தனது மகன் உதயநிதிக்கு முடிசூட்டு விழா நடத்தியுள்ளார். எனவே இதை மக்கள் உணரவேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.