வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது.கடந்த டிசம்பர் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தது.
இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி சேஸிங்கில் இக்கட்டான கட்டத்தில் இருந்தபோது அஷ்வினும் ஸ்ரேயஸூம் சிறப்பாகக் கூட்டணி அமைத்து அணியை வெல்லவைத்தனர். முக்கிய பேட்ஸ்மேன்கள் கூட வங்கதேசத்தின் சுழலுக்கு திணறிய போது அஷ்வின் எப்படி அத்தனை திறம்பட செயல்பட்டார் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
இந்நிலையில் அஷ்வினே அந்த மீர்ப்பூர் டெஸ்ட் ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியிருக்கும் அவர், ‘ஆட்டம் முடிந்த பின்னர் சகிப்-அல்-ஹசன் என்னிடம் வந்து பேசியபோது, மீர்ப்பூரில் நாங்கள் டாஸ் வெற்றி பெற்றாலே ஆட்டத்தையும் வென்றுவிடுவோம். ஆனாலும் நீங்கள் எங்களை வீழ்த்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் என்று கூறினார். இதுதான் இந்த மைதானத்தின் சிறப்பு. இந்த மைதானம் முழுக்க முழுக்க வங்கதேச அணிக்கு சாதகமானதாகும். மூன்றாவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி, நன்றாக விளையாடுவார்கள் என்று தெரியும். மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 60 – 70 ரன்களை எடுத்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால், மூன்றாவது நாள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை மட்டுமே சேர்ந்த்திருந்தது. இதனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒருவித பதற்றத்துடனும் சோகத்துடனும் இருந்தோம். எங்களுடைய அறைக்கு வந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உற்சாகத்துடன் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். உண்மையில் ராகுல் டிராவிட் அவர்கள், தங்கமான மனிதர். பயிற்சியின் போது, நன்றாக விளையாடியதற்காக என்னைப் பாராட்டினார். வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்களா என்பதே எனக்கு மிக முக்கியம் என்று ராகுல் டிராவிட் கூறினார். ரிஷப் பண்ட் நன்றாக விளையாடுவார் என்று நினைத்தேன், ஆனால் அவரும் அவுட் ஆகிவிட்டார்.
வங்கதேச அணியின் ஸ்பின்னர்கள் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனின் முழங்காலுக்கு கீழேயே பந்து வந்தது. நம்முடைய ஸ்பின்னர்களும் அப்படித்தான் வீசினார்கள். ஆனால், வங்கதேச பேட்ஸ்மேன்கள் உயரம் குறைவானவர்கள் என்பதால் அதை கொஞ்சம் இலகுவாகவே சமாளித்துவிட்டார்கள்.

நம் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் உயரமானவர்கள் என்பதால் முழங்காலுக்கு கீழே பந்து திரும்பும் போது ஆட சிரமமாக இருந்தது. வலைப்பயிற்சியின் போது, அதற்கு ஏற்றவாறு பயிற்சி செய்திருந்தேன்.
கொஞ்சம் கால்களை அகற்றி வழக்கத்தவிட இன்னும் அதிகமாக குனிந்தவாறே பேட்டிங் ஆடினேன். அதனால்தான் வங்கதேச ஸ்பின்னர்களை கொஞ்சம் நன்றாக எதிர்கொள்ள முடிந்தது.
From emerging victorious after a tricky run chase to sharing the excitement of red-ball cricket
Match-winners @ashwinravi99 & @cheteshwar1 sum up #TeamIndia’s series win against Bangladesh – By @RajalArora
Full Interview #BANvIND https://t.co/5E8DzZ0bVP pic.twitter.com/4XSe2HjInB
— BCCI (@BCCI) December 25, 2022
ஆட்டத்தை வென்றவுடன் ஸ்ரேயஸ் ஐயர், ‘நீங்கள் இருக்கும் வரை நிச்சயமாக இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது, அதேமாதிரி நடந்து விட்டது’ என்று கூறி கட்டிப்பிடித்தார். மொத்தத்தில் இது சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்தது, நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம்.”
அவர் மேலும் பேசுகையில், “கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ், இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது பலருக்கு வருத்தமாக இருக்கும். குல்தீப் யாதவிற்கும் வருத்தம் அளித்திருக்கலாம். பொதுவாகவே பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்ற மாற்றங்கள் வராது, ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு இது போன்ற மாற்றங்கள் வரும். அதே சமயம், குல்தீப் யாதவ்-க்கு மற்றாக ஜெயதேவ் உனட்கட் களமிறங்கியதும் சந்தோஷம் அளித்தது. இந்த ஆட்டத்தில் ஜெயதேவ் உனட்கட் சிறப்பாக பந்து வீசினார்’ என்றும் கூறியுள்ளார்.