சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சந்திப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கைகளால் திறந்து வைக்கப்பட்ட நேரு சிலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியதில் முன்னாள் பிரதமர் நேருவின் சிலை சுக்குநூறாக உடைந்துள்ளது.
இந்த விபத்தில் கார் டிரைவர் ஏழுமலைக்கு படுகாயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் நசரத்பேட்டை சந்திப்பில் குவிந்தனர். நேருவின் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டினர். இதன் காரணமாக பதட்டமான சூழல் உண்டானது. இதனால் நசரத்பேட்டை சந்திப்பு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.