2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குறித்த விரைவுப் பார்வை இது.
‘வங்கத்து பெண் புலி’ அரசியலில் அதிரடி காட்டும்போதெல்லாம் மம்தா பானர்ஜியை இப்படித்தான் உள்ளூர் பத்திரிகைகள் விமர்சிக்கின்றன. நல்ல ஓவியர், கவிதாயினி, இசைக்கருவிகள் வாசிக்கும் திறன் பெற்றவர் என்றிருந்தாலும் அதிரடி முடிவுகள், துணிச்சலான பேச்சுக்கள், வளைந்து கொடுக்காத தன்மை என்று கவனம் ஈர்க்கிறார் மம்தா பானர்ஜி. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற மம்தா பானர்ஜி, 1998-ல் காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார் மம்தா பானர்ஜி. ஆனால் 2011ல் தான் அவரால் காங்கிரஸ், இடது சாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.
அதன்பின்னர் மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள மம்தா பானர்ஜி வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிச்சயமாக முக்கியமான சக்தியாக இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பாஜகவுக்கு என்றும் தலைவணங்க மாட்டேன் என்பது தான் மம்தா பானர்ஜியின் தாரக மந்திரம்.
பாஜகவை விமர்சிக்கும் அளவிற்கு அவர் காங்கிரஸையும் விமர்சிக்கிறார். “அரசியலை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு பப்ளிசிட்டி செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக மாற்றி வருவதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் காங்கிரஸார் மோதினர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு நாங்கள் பூச்செண்டு தருவோம் என்றா நினைத்தீர்கள். ஒருவரால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதற்காக நாடு கஷ்டப்பட வேண்டுமா? மாநிலக் கட்சிகள் ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும். அதைப் போல கூட்டாட்சி அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். மாநிலங்கள் வலுவுடன் இருந்தால், மத்திய அரசும் வலுவுடன் இருக்கும்” என்று பல மேடைகளில் முழங்குபவர் தான் மம்தா பானர்ஜி.
ஆனால், கடந்த டிசம்பர் 16-ம் தேதி அமித் ஷா மற்றும் மம்தா பானர்ஜி சந்தித்ததும், கொல்கத்தாவில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளதும் மம்தா பானர்ஜி, ஊழல் விசாரணைகளில் தற்காப்பு நிலையில் இருக்கிறார் என்ற விமர்சனங்களை ஈர்த்துள்ளன. மாநில அரசாங்கத்தின் நிதி நெருக்கடி, நிதி உதவி வழங்குவதில் மத்திய அரசின் கெடுபிடியே அவரது சமீப கால மென்மையான அரசியலுக்கு காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதுவாக இருந்தாலும் அரசியலில் தடம் பதித்த காலத்தில் இருந்து 2022 வரை கவனம் ஈர்க்கும் தடம் பதித்த தாரகையாகவே திகழ்கிறார் மம்தா பானர்ஜி.