புதுடெல்லி, : இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவல் காணப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் பிஎப்7 கொரோனா தொற்று இந்தியாவிலும் புகுந்ததையடுத்து, ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்துள்ளன. தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். எனவே அடுத்த 40 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில்,‘‘ கிழக்கு ஆசியாவில் புதிய கொரோனா தொற்று உறுதியான பின் 30- 35 நாட்களுக்கு பின் இந்தியாவில் அந்த தொற்று பரவும்’’ என்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ புதிய வகை கொரோனா ஆபத்து குறைந்தது. ஒரு வேளை கொரோனா அலை ஏற்பட்டாலும் கூட இறப்பு, மருத்துவமனையில் அனுமதிப்பது போன்றவை குறைவாகதான் இருக்கும். கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த பயணிகள் 6,000 பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான உபகரணங்கள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவிய விரைவில் ஆய்வு நடத்த உள்ளார்’’ என்றனர்.