சிவகங்கை மாவட்டத்தை அடுத்த காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஏலவசனூர்கோட்டையில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார்.
லட்சுமணனும் 300 ஆடுகளும் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆட்டு மந்தையில் புகுந்தது. இந்த சம்பவத்தில் லட்சுமணனுடன் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. பேருந்தை பின் தொடர்ந்து வந்த மற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஒன்றின் பின் ஒன்று மோதி நின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் சாலையில் சிதறி கிடந்த செம்மறி ஆடுகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் கணேசன் மற்றும் விருதாச்சலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.