“இங்கு பெண்கள் விற்கப்படுகிறார்கள்” -விஸ்மயா விட்டுச் சென்றதை முடித்த ஜெயா!

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மலையாள திரைப்பட விமர்சனம்: மலையாள படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை பார்க்கும் போது கடந்த ஆண்டு வரதட்சணை கொடுமையாலும், கணவர் அடித்து துன்புறுத்தியதாலும் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா என்ற இளம்பெண் தான் நம் கண் முன் வந்து செல்கிறார். பெண்கள் திருமணம் என்ற பெயரில் விற்கப்படுவதை ஆணித்தனமாக அடித்து சொல்லி இருக்கிறார் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” இயக்குநர் விபின் தாஸ்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் ஆயுர்வேத இறுதி ஆண்டு மாணவியான விஸ்மயா தனது கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் வீட்டின் குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விஸ்மயாவுக்கு 2020-ம் ஆண்டு தான் கிரண் என்பவருடன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக பல ஏக்கர் நிலம், ரப்பர் தோட்டம், 100 சவரன் நகை, கார் என பல விலையுயர்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திருமணத்துக்கு பிறகு கணவர் அடித்து துன்புறுத்துவதாக பலமுறை பெற்றோரிடம் கூறியுள்ளார் விஸ்மயா. பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் கேட்டுள்ளார். ஆனால் அப்படி அவர் வாழாமல் வீட்டுக்கு வந்துவிட்டால் உறவினர்கள் என்ன பேசுவார்கள் என்பதால், பெற்றோர் மறுத்துள்ளனர். அதேபோல விஸ்மயாவும் அக்கம் பக்கத்தினரை நினைத்து யோசித்ததாக சொல்லப்பட்டது. சொகுசு கார் கேட்டு ஹெல்மெட்டால் அடித்து துன்புறுத்தப்பட்ட விஸ்மயா, தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். திருமணம் முடிந்து சென்ற மகள் சடலமாகவே பெற்றோர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த கொடூரம் கேரளாவை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலைய செய்தது. விஸ்மயா மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து குரல்கள் எழுந்தன. ஒருவழியாக விஸ்மயா கணவர் கிரணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் கீழமை நீதிமன்றம் இந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் நமக்குள் எழும் கோபங்களுக்கு பதிலாக வந்திருக்கிறாள் ஜெய பாரதி. ஆம், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் நாயகிக்கு படத்தில் இந்த பெயர் தான். டிகிரி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் நுழையும் நாயகிக்கு தவறான நபர் மீது காதல் எழுகிறது. அவர் பொதுவெளியில் பெண்ணியம் பேசித் திரிகிறார். சிறுவயதில் இருந்தே வீட்டில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாயகிக்கு இவர் பேச்சு பிடித்துப் போக காதலில் விழுகிறார். கல்லூரி பேராசிரியரை காதலிக்கத்தொடங்கியதும் தான், அவர் எப்படி பட்ட சைகோ என்பது தெரிகிறது. வெளியில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டு தனது காதலியின் உடையைக் கூட கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருக்க நினைக்கிறார். இது நாயகியின் வீட்டுக்கு தெரியவர உடனே வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மகளின் ஆசைகளை பற்றி துளியும் கவலை இல்லாத பெற்றோர், ஆடு மாடுகளை வளர்த்து சந்தையில் விற்பதைப் போல, தங்கள் பெண்ணை திருமணம் என்ற பெயரில் விற்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குநர். வாழ்க்கை முழுவதும் கூடவே வரும் துணையை மகளுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கவில்லை. 

திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு சென்றபிறகு தான் தெரிகிறது, மாப்பிள்ளை எவ்வளவு கோவக்காரர் என்று. புதிய வாழ்க்கைக்குள் நுழையும் நாயகி, தனது கணவரிடம் தினமும் அடி வாங்குகிறார். மனைவி கணவனை எதிர்த்து பேசக்கூடாது, கணவனுக்கு பிடித்ததை மட்டும் தான் சமைக்க வேண்டும், அவரைக்கேட்காமல் எதையும் செய்யக்கூடாது போன்ற So Called விஷயங்களை நாயகியும் சந்திக்கிறார். பிறகு சிந்திக்கிறார். ஒருகட்டத்தில் கணவனை அடி வெளுத்துவிடுகிறார். இதனால் ஷாக்கான நாயகனுக்கு பிறகு தான் தெரிகிறது, யூடியூப் பார்த்து கும்ஃபுவை நாயகி கற்றுக்கொண்டது. இங்கும், இயக்குநர் டச் ஒன்று உள்ளது. வீட்டிலேயே மாட்டிக்கொண்டோம் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை என்று புலம்பும் பெண்களுக்கு, ஒரு ஸ்மார்ட் போன் போதும் உங்களை நீங்கள் தற்காத்துக்கொள்ள என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். கணவனுக்கு அடங்காத மனைவிக்கு குழந்தை கொடுத்துவிட்டால், அதன்பிறகு அவள் ஒரு அடிமை என்பது போன்ற சில உரையாடல்களில் ஆண்களின் எண்ண ஓட்டங்களை போரப்போக்கில் சொல்லிவிடுகிறார் விபின் தாஸ்.

malayalam movie review

கணவன் அடிப்பதை தந்தையிடம் சொல்லும் போது, அதனை காது கொடுத்து கூட கேட்க அவர் தயாராக இல்லை. இதெல்லாம் சகஜம் அட்ஜஸ் செய்துகொள் என்ற அட்வைஸ் தான் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. இப்படி பல மன உளைச்சல்களுக்கு நடுவே சிக்கித்தவிக்கும் நாயகி, ஒரு முடிவெடுக்கிறார். விஸ்மயா எடுக்க மறந்த முடிவை ஜெய பாரதி எடுக்கிறார். பெற்றோரும் வேண்டாம், கணவனும் வேண்டாம் சொந்த காலில் நிற்பேன் என்று வீட்டை விட்டு செல்கிறார். பாதியில் நிறுத்திய டிகிரியை தொடர்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு பிசினஸ் செய்யவும் தொடங்குகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் இரு நீதிமன்ற காட்சி வரும். அதில் பெண்களுக்கு தேவையான மூன்று விஷயங்கள் என்ன என்று நீதிபதி நாயகியின் கணவரிடம் கேட்க, அவர் பக்தி, ஒழுக்கம், வீட்டு வேலை செய்வது என சொல்லும் பதிலை கேட்டு ஷாக்காகிறார். அதன்பிறகு விவாகரத்து கேட்ட கணவனுக்கு என்ன பதில் சொன்னார் நாயகி என்பதுடன் படம் முடிகிறது. 

ஒருவேளை விஸ்மயாவுக்கும் டிகிரி முடித்த பிறகு திருமணம் நடந்திருந்தால், வேலைக்கு சென்றிருப்பாள். தன் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நிதானமாக முடிவெடுத்திருப்பாள். இப்போது உயிரோடு இருந்திருப்பாள். இந்தப்படம் நிச்சயம் சிலருக்கு எரிச்சலை தரும். ஆனால் பலருக்கு தைரியம் தரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.