வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நான் ரசித்துக் கிறங்கிய ஒரு இளையராஜா பாடல் என்று என்னால் தேர்வு செய்யவே முடியாது. 1330 திருக்குறளில் உங்களுக்கு பிடித்த ஒரு குறளைச் சொல்லுங்கள் என்றால் எதைச் சொல்வது… ஒவ்வொரு திருக்குறளும் ஒவ்வொரு படிப்பினையை அல்லவா போதிக்கும். அதுபோல் தான் ‘ராஜா’ஸார் இசையமைத்த பாடல்களும். எந்த பாடலைச்சொல்வது.. எந்த பாடலை விடுவது.. ஒரு பாடலைச் சொன்னால் இன்னொரு பாடல் கோபித்துக் கொள்ளுமே! ஒவ்வொரு பாடல்களுமே ஒரு அழகிய நினைவுகளை தந்துவிட்டு தான் செல்லும். உண்மை.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்… ‘அலைகள் ஓய்வதில்லை’படத்தில் வரும்
`ஆயிரம் தாமரை மொட்டுகளே’
என்ற பாடல். கிராமப்புறங்களில் பெண்கள் பாடும் கும்மிப் பாட்டை அப்படியே அழகாய் மாற்றியிருப்பார் ராஜா.
மிருதங்கத்துடிப்பில் இப்பாடல் துவங்கும். மிருதங்கங்கத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒருமுறை இதயத்துடிப்பு எகிறி உச்சத்துக்கு செல்ல.. அதை ஜானகியின் குரலில் ‘ஹம்மிங்’ வார்த்து… ராஜா சார் அழகூட்டியிருப்பார் பாடலில். காதல் உணர்வுகளை மிருதங்கம் கொண்டு மிக அழகாய் மொழி பெயர்த்திருப்பார் இசையில்.

‘ஈகா’ திரையரங்கில் கல்லூரி நண்பர்களுடன் படம் பார்த்த அழகிய நினைவு… மனதில் கல்வெட்டாய். கண்களில் பட்டாம்பூச்சிகளை கும்மியடிக்க வைத்த அசத்தலான காட்சியமைப்பு.
புல்லாங்குழல்+வயலின்+கோரஸ் எல்லாமே கனகச்சிதமாக செய்திருக்கும் இந்தப் பாடலில்.
புல்வெளியில் மீது இரண்டு பூமாலை.. ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை…
போன்ற அருமையான வரிகள்
கவிப்பேரரசுவின் மேதைமையையும்+இருப்பையும் அழகாய் பதிவு செய்யும்.
இந்த பாடலின் முன்னால் வரும் பின்னணி இசையிலும் ‘மினி சிம்பொனி விருந்து படைத்திருப்பார் ஸார்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.. மனசு தன்னாலே ரீ சார்ஜ் ஆகிவிடும். கல்லூரி கால நினைவுகளைத் தட்டி எழுப்பும் பாடலின் இனிமை.. கவலைகளை மறக்கவைத்து மேஜிக் செய்யும் என்பதே உண்மை .

இது மட்டுமா … இன்னமும் நிறைய இருக்கிறது இதோ எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல் ..
ராஜா சார் எழுதி இசையமைத்து பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி பாடிய
‘இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே… வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே …‘
எனத்தொடங்கும் ‘ஹேராம்’ பட பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் .
கேட்டுத்தான் பாருங்களேன். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனசு விசாலமாகி , வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். உயிரில் பட்ட உளியாக பாடலின் இசை நம்முள்ளே உள்நுழையும்.

இந்த பாடலின் வரிகளும், இசையும் உலகத்தையும் தாண்டியது . பாடல் மட்டுமல்ல கமலின் நடிப்பும் உலகத்தரம் வாய்ந்தது இந்தப் பாட்டை கேட்கும் போது மனசு… வான்வெளி எங்கும் சுற்றி திரிந்து பறந்து வரும். இப்படி ஒவ்வொரு பாடல்களும் அது தரும் நினைவுகளும் ஏராளம் .. ஏராளம் .
ஒரு விமானம் வழக்கமான முறையில் அல்லாமல் ஜிவ்வென்று அப்படியே டேக் ஆஃப் ஆனால் எப்படி இருக்கும்..?! இந்தப் பாடல் தரும் அனுபவமும் அப்படித்தான்.
கீழே இறங்காமல் உயரத்திலேயே பறந்து அப்படியே பல்லவியில் மீண்டும் இணைவது போல மிகச்சிறப்பாக இசையமைந்திருக்கும்…
“பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே…கிளியே…இளம் கிளியே கிளியே… அங்கு வரவா தனியே”…
தீபம் படத்தில் வரும் அருமையான பாட்டு.

இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனசு புத்துணர்ச்சி பெறும்.
சந்தோஷம் பொங்கும். வித்தியாசமான, வேகமான இசை தொடங்க… வயலின், குழல் எல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யும்.
தேக்கடியின் அழகை தன் இசையால் மேலும் அழகூட்டியிருப்பார் ராஜா. புலமை பித்தனின் வரிகளுக்கு வார்த்தை ஜாலம் கொடுத்திருப்பார்.
“இளமாலை தென்றல்…. கனவுகள் ஆடுது”
3வது சரணத்தின் தொடக்கத்திற்கு முன் ஒலிக்கும் இசை…ராகம் மாறி பின் தொடங்கிய ரிதத்திற்கு திரும்பி வரும் அற்புதமிருக்கே… அது ராஜா அவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
இந்த பாடல் வந்து 43 வருடங்கள் கழிந்தும்.. இப்ப கேட்டாலும் புதிய பாடலாகவே ஒலிப்பதுவே…
இளையராஜா வை..”ராஜாதி ராஜா”என்று சொல்ல வைக்கிறது. கடவுள் நமக்கு அளித்த கொடை….”ராஜாதி ராஜா”இளையராஜா.
இசை ஒன்று போதும், தொடாத தூரத்தையும் தொட்டுவிட… யாரைப் போலவும் இல்லாமல் ‘இதுதான் நான்’ என்று தன் இயல்பு மாறாமல் இசையமைக்கும் இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். என்னைக்கவர்ந்த எனக்கு மிகவும் பிடித்த பாடல்…
‘உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை….
ஒரு கதை என்றும் முடியலாம். முடிவிலும் ஒன்று தொடரலாம் ..
இனி எல்லாம் சுகமே’… எனத் தொடங்கும்’ அவள் அப்படித்தான்’ படத்தின் பாடல்.

கங்கை அமரனின் வரிகளுக்கு அழகாய் இசை அமைத்திருப்பார் இளையராஜா. பாடலில் வரும் துவக்க இசை இடை இசை என்று அனைத்திலும் தன் முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருப்பார்.
‘உன் நெஞ்சிலே பாரம் ,உனக்காகவே நானும்… சுமைதாங்கியாய் தாங்குவேன் !
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்…
கண்ணீரை நான் மாற்றுவேன்…
இந்த வரிகள், பாடல் காட்சிகள், ராஜா சாரின் புல்லாங்குழல் வயலின் என அனைத்தும் சேர்ந்து மென் சோகத்தைத் தரும்.
அழகியல் இசை என்றால் அது ஒன் அண்ட் ஒன்லி ராஜா சார் இசை தான் காற்றில் பறக்கும் சிறகு போல அத்தனை மென்மையாகவும் இதமாகவும் இசைக்குகஏற்றார்போல் ஜேசுதாஸூம்பாடியிருப்பார்.
இந்த பாடலில் ,அத்தனை நவீனத்துவம் இருக்கும். இழுத்துப் போர்த்திக்கொண்டு இசையின் சுவாசத்தில் மறந்து போய்விடும் கவலைகள்!
என் மனதில் இனம் புரியாத வருத்தம் இருக்கும் பொழுது, நான் எதேச்சையாக வானொலியை போட இந்த பாடல் ஒலிக்கும். நான் அந்த நேரத்தில் வெளியில் இருந்தால் யாருடைய செல்போனின் காலர்டீயூனாகவோ, தெருமுனை டீக்கடையின் ஸ்பீக்கரிலோ கண்டிப்பாக இந்த பாடல் ஒலிக்கும். இது என் வாழ்க்கையில் பலமுறை நடந்துள்ளது. இந்தப் பாடலைக் கேட்டதும் என் மனதில் கவலைகள் மறையும் . இவ்வளவும் சொல்லிவிட்டு சிவச்சந்திரனைச் சொல்லாமல் விடுவதா? நோ நெவர்! அவரும் அவர் பங்குக்கு அந்த பாடலை உள்வாங்கி அருமையாக நடித்திருப்பார்.
இப்படி இசைஞானியின்…பாடல்களும்…அதுதரும் நினைவுகளும்….ஏராளம்..ஏராளம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.