இலவச வேட்டி சேலை திட்டம்: "நெசவாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் அமைச்சர் காந்தி" – அண்ணாமலை

இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடைகள் அணிய வேண்டும் என்பதற்காகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1983-ம் ஆண்டு கொண்டுவந்தத் திட்டம் தான் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.

எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததிலிருந்து முந்தைய ஆட்சி காலங்களில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த தி.மு.க தற்போது இலவச வேட்டி, சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களையும் வஞ்சிக்க நினைக்கிறது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நெசவாளர் பெருமக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டிலேயே, அதிகமான அளவில் தனியாரிடம் கொள்முதல் செய்து நெசவாளப் பெருமக்கள் வயிற்றில் அடித்த இந்த தி.மு.க அரசு, அடுத்த ஆண்டு இவ்வாறு நடக்காது என்று கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டும் பெருமளவில் தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்குவது வழக்கம்.

முதல்வர் ஸ்டாலின்

ஆனால், இந்த ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானது. அத்துடன் அரசு வழங்கிய நூல் தரம் குறைவாக இருந்ததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளப் பெருமக்கள்.

வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் 80 சதவிகித அளவுக்கு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் முடிந்திருக்கும். ஆனால், தற்போது சேலை உற்பத்தி 42 சதவிகிதமும், வேட்டி உற்பத்தி 29 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்திருப்பதாக கவலை தெரிவித்திருக்கின்றனர். மூன்று மாதங்கள் கால தாமதமாக விலை இல்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான உத்தரவு வழங்கப்பட்டதாலும், தரமற்ற நூல் வழங்கி உற்பத்தியில் மேலும் தாமதப்படுத்தியதாலும், பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அச்சப்படுகின்றனர் நெசவாளர்கள்.

மொத்த உற்பத்திக்கான தரமான நூலை, வெறும் 1 மாதம் முன்பாக கடந்த நவம்பர் மாதம் தான் வழங்கி இருக்கிறது தி.மு.க அரசு. ஏழை எளிய மக்களும், நெசவாளர் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விலை இல்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம். தி.மு.க-வுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் படி மடைமாற்றம் செய்யப்படுகிறது என்று எண்ணும்படி நடந்து கொள்கிறது.

கைத்தறிதுறை அமைச்சர் காந்தி

ஒரு சேலை 200 ரூபாயும், ஒரு வேட்டிக்கு 75 ரூபாயும் பெற்றுக் கொண்டு நெசவு செய்யும் தொழிலாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் தி.மு.க-வின் கைத்தறி அமைச்சர் காந்தி. வேண்டுமென்றே நூல் கொள்முதல் உத்தரவை தாமதப்படுத்தி, தரமற்ற நூல் வழங்கி, அதன் மூலம் உற்பத்தியையும் தாமதப்படுத்தி இறுதியில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டதாக அறிவித்த ரூ. 487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என்பதை மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.