கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் விமானப் படைத் தரப்பில் கூறும்போது, “ரஷ்யா இன்று காலை தொடங்கியதிலிருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் சுமார் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் வீசியது. இதன் காரணமாக தலைநகர் கீவ் பகுதியில் 90% மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சிலவற்றை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். எனினும், சில எவுகணைகள் இலக்கை தாக்கி அழித்தன. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த போதிய ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில், உக்ரைனில் ஏவுகணை மழையை ரஷ்யா பொழிந்துள்ளது.