எடப்பாடியும் ஸ்டாலினும் கூட்டு: பற்ற வைத்த பெங்களூர் புகழேந்தி

எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ரகசிய கூட்டில் உள்ளார் என்று கூறியுள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகி பெங்களூர் புகழேந்தி திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொடநாடு குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் அதிமுக மீண்டும் வலிமையான இயக்கமாக மாறும், அதிமுக வலிமையான இயக்கமாக மாறக்கூடாது என்பதற்காக திமுகவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அதனால் தான் கட்சியை வலுப்படுத்த முன் வரவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள், கொடநாடு கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று முதலமைச்சர்

தேர்தல் பரப்புரை மேடைகளில் பேசினார். ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதனை பொதுமக்கள் மட்டுமின்றி திமுக தொண்டர்களும் கேட்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் எடப்பாடி அணியின் கணக்கு வழக்குகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். தேர்தல் வரும் வரை எந்த மனுவாக இருந்தாலும் அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு அக்னாலேஜ்மென்ட் அளிப்பார்கள். தேர்தல் சமயத்தில்தான் இரண்டு தரப்பிற்கும் உள்ள பிரச்சனைகள் பற்றி முடிவு செய்வார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிச்சல் இருந்தால் 60 எம்எல்ஏக்களில் ஏதாவது ஒரு எம்எல்ஏ தொகுதியில் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? ஓ.எஸ் மணியன் போன்ற புத்திசாலிகளும் சின்னம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு, கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமியை தூக்கி பிடிக்கிறார்கள். கட்சிகள் ஒன்றாக இணையும்போது அப்போது யார் யார் நிர்வாகிகள் என்று முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.