புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவர் மனம் திறந்து திருமணம் பற்றி பேசியுள்ளார். இந்திரா காந்தி போன்ற குணநலன் கொண்ட பெண்ணை வாழ்க்கை துணையாக ஏற்பீர்களா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எனது அன்னையை மிகவும் பிடிக்கும். என் பாட்டி இந்திரா காந்தியை நான் இன்னொரு அன்னை என்றே கூறுவேன். நான் திருமணம் செய்யும் பெண்ணுக்கு எனது அன்னையின், பாட்டியின் பண்புகள் சேர்ந்திருந்தால் நல்லது” என்றார்.
அதே பேட்டியில் தனது இருசக்கர வாகன ஆசை பற்றியும் அவர் பேசினார். “எனக்கு கார்களைவிட பைக் ஓட்டுவதே பிடிக்கும். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஆனால் நான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் பைக் ஓட்டியுள்ளேன். அவை ஒரு சீன தயாரிப்பு. ஆனாலும் அவை நன்றாக இருந்தன. இந்தியாவின் பழைய லாம்ப்ரட்டா வாகனம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவில் இ வாகனம் பற்றி நிறைய பேசுகிறார்களே தவிர அதை செயல்படுத்த திட்டங்கள் இல்லை” என்று கூறினார்.
தன்னை பப்பு என்று விமர்சிப்பவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ராகுல், “அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. என்னை எப்படி வேண்டுமானால் அழையுங்கள். என்னை அடித்தாலும் கூட நான் உங்களை வெறுக்க மாட்டேன். என்னை அப்படி அழைப்பவர்கள் உள்ளார்ந்த அச்சத்தாலேயே அப்படி அழைக்கிறார்கள். எனக்கு இன்னும் நிறைய பெயர்கள் கூட சூட்டலாம். நான் அப்போதும் சலனமற்று இருப்பேன்” என்று தெரிவித்தார்.