ஒமிக்ரான் BF.7 தொற்று 16 மடங்கு அதிகம் பரவக்கூடியது… சட்டென்று அதிகரிக்கும் கொரோனா?

Omicron BF.7 : சீனா, பிரேசில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகியுள்ளது. தொடர்ந்து, சீனாவில் கடுமையாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று வகை இந்தியாவில் 4 பேரிடம் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, கடந்த டிச. 24ஆம் தேதியில் இருந்து விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதன்படி, விமான நிலையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 2 நாள்களில் மட்டும் 39 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மொத்தம் இந்த 2 நாள்களில் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 
சீனாவில் அதிகம் பரவும் ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று, மற்ற கொரோனா தொற்று வகைகளை விட 16 மடங்கு அதிகம் பரவக்கூடியது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

 தற்போதைய நிலவரப்படி, ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்து மற்றும் தடுப்பூசியின் விளைவு சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நேற்று முன்தினம் (டிச. 27) கொரோனா தொற்று ஒத்திகையை நடத்தி நோய்த்தொற்றுகள் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான தயார்நிலையை உறுதி செய்தன.

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்காக விமான நிலையங்களில் கொரோனா தொற்று சோதனை தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. 

தவிர, உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனைகள் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் யாருக்காவது அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது கொரோனா தொற்று இருப்பது உறுதியானாலோ, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தொற்று பரவல் அதிகமாவதை தடுக்க, கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அந்தெந்த மாநில அரசுகள் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலும், ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பின் பொது இடங்களில் கொண்டாட்டங்கள் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.