புதுடெல்லி; உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகடந்த நவம்பர் 17 முதல் ஒரு மாதம்நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் வாரணாசிக்கு இடையிலான பாரம்பரிய தொடர்புகள் நினைவு கூரப்பட்டன. இந்நிகழ்ச்சியால், உ.பி. மக்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே ஒரு புரிதலும் ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட தமிழ்நாடு உணவு வகைகள் உ.பி. மக்களால் ருசிக்கப்பட்டு பெரிதும் பாராட்டை பெற்றன. இதன் தாக்கமாக உ.பி.யில் அனைத்து நகரங்களிலும் தமிழகம், ஆந்திரா, கேரளா,கர்நாடகா வகை உணவுகளுடன் பிரத்யேக உணவு வீதிகள் தொடங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தெற்கு முதல் வடக்கு, கிழக்கு முதல் மேற்கு என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றே. தொன்மைக் காலத்திலிருந்து நம் அனைவருக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. இதுபோன்ற அனைத்து கலாச்சாரங்களும் நம் நாட்டின் பலமாக அமைந்துள்ளது. இந்த பலத்தை காட்டவே பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்.
இதில், தமிழகத்தில் இருந்து விவசாயிகள், மாணவர்கள், கைவினை கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கலாச்சார பரிமாற்றம் மூலம் தமிழர்களுக்கு உ.பி. உள்ளிட்ட வடமாநில மக்கள் தொடர்பான தவறான கருத்துகள் அகற்றப்பட்டன.
தமிழர்கள் மீது அன்பு: சுயநல சக்திகளால் இத்தகைய கருத்துகள் தமிழர்கள் மனதில் விதைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காசி வந்தபோது, உ.பி. மக்களால் அவர்களுக்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் இந்தக் கருத்துகளை போக்கும் வகையில் இருந்தன.
இதனால், வடமாநில மக்களும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள உணவு முறைகளை அறிவது அவசியம். நம் நாட்டின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம், உணவுமுறை வெவ்வேறாக இருப்பினும் அதில் கிடைக்கும் உத்வேகம் ஒன்றுதான். இதற்கு அடித்தளமாக தென்னகத்துடன் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் உணவு வகைகள் உ.பி.யில் அறிமுகமாவது அவசியம். இவ்வாறு யோகி கூறினார்.
விரைவில் அரசு உத்தரவு: உ.பி. முதல்வர் யோகியின் இந்த அறிவிப்பை அவரது அரசின் கலாச்சாரம் மற்றும் வீட்டுவசதித் துறைகளால் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் 75 மாவட்ட தலைநகரங்களிலும் பிறகுபடிப்படியாக மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் இந்த உணவு வீதிகள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான உ.பி. அரசின் உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பின் உ.பி.யில் தமிழர்கள் மீதான மதிப்பும் சற்று கூடியிருக்கிறது.
வடமாநில மக்களும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள உணவு முறைகளை அறிவது அவசியம்.