சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.2-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிற்சங்கப் பேரவைகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் தொழிலாளர் துறை உடனான பேச்சுவார்த்தைக்கு் பிறகு, கூட்டமைப்பின் தலைவர் கா.இளவரி, செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை ஊழியர்கள் இடையே இரட்டை ஊதிய முறையை அகற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை அமல்படுத்தக் கோரி கடந்த டிச.21-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த நவ.23-ம் தேதி சர்க்கரைத் துறை ஆணையர், தொழிலாளர் ஆணையருக்கு அறிவித்தோம்.
இதுதொடர்பாக கடந்த 16-ம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு தொடர்பாக பதில் அளிக்க நிர்வாகம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அவ்வாறு அவகாசம் கொடுக்கப்பட்டு, மீண்டும் பேச்சு நடத்தப்பட்டது. அதில் ஊதிய கோரிக்கை, பணிநிரந்தரம் போன்ற கோரிக்கைகளில் எந்தவித முன்னேற்றமோ, தீர்வோ ஏற்படவில்லை. எனவே, வரும் 1-ம் தேதிக்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் ஜன.2-ம்தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அனைத்து ஆலைகளிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.