சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கருவறை முன் உள்ள கொடிமரத்தில் குஞ்சிதபாத தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா நடக்கிறது.
ஜனவரி 5ம் தேதி தேர்த்திருவிழாவும், ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை பூஜையும் நடைபெறுகிறது. 6ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜனவரி 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.