புதுடெல்லி: சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்தப் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RT-PCR பரிசோதனை கட்டாயம்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT-PCR எனப்படும் கரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஏர் சுவிதா சான்றிதழ் கட்டாயம்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், தங்களின் உடல்நிலை குறித்து தாங்களே சான்றளிக்கும் ஏர் சுவிதா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு எண்கள், சமீபத்தில் மேற்கொண்ட பயண விவரங்கள், உடல்நிலை குறித்த விவரங்கள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இந்தியா வரும் வெளிநாட்டுப் பணிகளால் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமானவை: கரோனா தொற்று சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அது பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை எனவே, அடுத்த 40 நாட்கள் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஜனவரி மத்தியில் இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதன் காரணமாகவே, வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பாக தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீத பயணிகளுக்கு ரேண்டம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.