தென்காசி மாவட்டத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 153 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை போலீசார் நேற்று அச்சங்குன்றம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக மொபட்டில் மூட்டையுடன் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் சந்தேகமடைந்து மொபட்டில் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை விற்பனை செய்த ரூபாய் 23 ஆயிரம் பணம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம் என்பதும்(46), அச்சங்குன்றம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது குடோனில் மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான 153 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சந்திரசேகரையும் கைது செய்தனர்.