புதுச்சேரி : டெலிகிராம் செயலி மூலம் ரூ. 31 லட்சம் மோசடி செய்த டில்லி கும்பல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, புதுசாரம் அன்னை தெரேசா நகர் மல்லிகை வீதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 30; மருந்து விற்பனை பிரதிநிதி. டெலிகிராம் செயலியில், பகுதி நேர வேலை உள்ளது எனக் கூறி ஒரு குரூப்பில் இணைத்துள்ளனர்.
முதலில் போனஸ் தொகை எனக்கூறி ரூ. 10 ஆயிரம் ராஜாராம் வெப்சைட் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மொபைலில் சின்ன சின்ன வேலைகள் (டாஸ்க்) கொடுத்து செய்ய கூறினர். டாஸ்க் முடித்ததும் ரூ. 840 வழங்கினர்.
வெப்சைட் அக்கவுண்டில் இருந்த ரூ. 800 தனது வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுத்து கொண்டுள்ளார்.
இதை நம்பி ரூ. 10 ஆயிரம் வீதம் பல முறை பணம் செலுத்தி டாஸ்க் செய்துள்ளார். தான் சேமித்து வைத்த பணம், மனைவி நகைகளை அடமானம் வைத்து இறுதியாக ரூ. 31.39 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார். இதன் மூலம் அவரது வெப்சைட் கணக்கில் ரூ. 37.34 லட்சம் பணம் சேர்ந்தது.
அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது வெப்சைட் கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.
பணத்தை எடுக்க வேண்டும் என்றால் மேலும் 10 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என டெலிகிராம் கும்பல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜாராமன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் டில்லியைச் சேர்ந்த வினோத் புருேஷாத்தம் ஜெரிவால், அஜய் பிரகாஷ் எக்ஸ்போர்ட், மஞ்சள்கட்டா அசோக், அனயா, கோபால் திவாரி, அமர்சூரி, அர்ஜூன்சிங் லம்பா, நெக்ஸ்டன் மல்டி டிரோட் ஆகிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement